செய்திகள்

லஞ்சம் வாங்கி வீடியோவில் சிக்கிய சப்–இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

Published On 2016-04-04 11:37 IST   |   Update On 2016-04-04 11:37:00 IST
லஞ்சம் வாங்கி வீடியோவில் சிக்கிய புதுவை சப்–இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்

புதுச்சேரி:

புதுவை உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஆறுமுகம். இவர் புதுவை நெல்லிதோப்பு அருள்படையாட்சி வீதியை சேர்ந்த என்ஜினீயர் செந்தில் என்பவரிடம் பேரம்பேசி ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

என்ஜினீயர் செந்திலுக்கும் அவரிடம் வேலை பார்த்த குமார் என்பவருக்கும் இடையே சம்பள பண பிரச்சினை இருந்தது. இதுதொடர்பாக செந்தில் மீது குமார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புகார் செய்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக சமாதானம் பேச சப்–இன்ஸ்பெக்டர்ஆறுமுகம் என்ஜினீயர் செந்திலை அழைத்துள்ளார். அப்போது என்ஜினீயர் செந்திலிடம் சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்கில் இருந்து தப்பிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு பெற்றார்.

இந்த லஞ்ச பணத்தை கொடுக்கும் காட்சியே வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியானது. லஞ்ச பணத்தை கொடுப்பவர் யார்? என்று தெரியவில்லை. ஆனால், சாதாரண உடையில் உள்ள சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் அதனை பெறுவது தெளிவாக தெரிகிறது.

லஞ்ச பணத்தை பெறும் சப்–இன்ஸ்பெக்டர் அதனை மேஜை டிராயரில் வைக்கிறார். இந்த வீடியோ காட்சியே பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் பரவியது. அதோடு இது புதுவை காவல்துறையிலும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.

இது தொடர்பாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணி ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் ஐ.ஜி.க்கு விளக்க அறிக்கை அனுப்பப்பட்டது. இதன் மீது ஐ.ஜி. பிரவீன்ரன்ஜன் நடவடிக்கை எடுத்து சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

Similar News