தமிழ்நாடு

நாகை பாஜக வேட்பாளரை வரவேற்க பாஜகவினர் பட்டாசு வெடித்ததால் 2 குடிசை வீடுகள் தீக்கிரையானது

Published On 2024-04-11 14:42 GMT   |   Update On 2024-04-11 14:42 GMT
  • நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம்.ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார்
  • பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றார்

நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம்.ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். அவர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று அவர், புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றார். அப்போது பா.ஜ.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

எஸ்.ஜி.எம். ரமேஷை வரவேற்க வைத்த பட்டாசுகள் வெடித்ததில் 2 குடிசை வீடுகள் தீக்கிரையானது. இதில், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்து குறித்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வருவாய் அலுவலர், வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயன் எரிந்த வீடுகளை பார்வையிட வந்த நிலையில், அவரை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News