திண்டுக்கல் அருகே வி.மேட்டுப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட 17-ம் நூற்றாண்டு கல்வெட்டு.
திண்டுக்கல் அருகே 17-ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு
- குளக்கரையில் கண்டறியப்பட்ட கணவன்-மனைவி நடுகல் 17-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்.
- நடுகல்லில் உள்ள ஆண் இப்பகுதியில் நாயக்கர் அரசின் நிர்வாகத்தில் முக்கிய அதிகாரியாக பணிபுரிந்திருக்கக்கூடும்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வாளர் விஸ்வநாததாஸ், மாணவர் ரத்தினம் முரளிதர், வரலாற்று ஆர்வலர்கள் சந்திரசேகர், உமாமகேஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகில் உள்ள வி.மேட்டுப்பட்டியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஒரு வீட்டில் இருந்த கணவன்-மனைவி நடுகல்லை கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், குளக்கரையில் கண்டறியப்பட்ட கணவன்-மனைவி நடுகல் 17-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். ஒரு குகை போன்ற வீட்டினுள் அமைந்துள்ள இந்த நடுகல் இடதுபுறம் ஆண் சிற்பத்தில் தலையில் அள்ளிமுடிந்து சவரிகொண்டை முடிச்சில் தொங்கும் குஞ்சமும், ஆணின் காதில் வளைகுண்டலமும், இருகரமும் மார்போடு இணைந்து கும்பிட்ட நிலையும், இடைவாரியிலிருந்து மீண்டும் காணப்படுகிறது.
இடுப்பில் இடைகச்சை ஆடை, தார்பாச்சி கட்டிய அமைப்பும் அதிலிருந்து கெண்டைக்கால்வரை மூடியநிலையில் இடைகச்சை ஆடை உள்ளது.
பெண் சிற்பத்தில் கொண்டை வலதுபுறமும், காதில் வலைகுண்டலமும், மார்பில் ஆரமும், இடதுகை தொங்குகரம், டோலிமுத்திரையும், வலதுகரம் இடுப்பில் வைத்தபடியும், இடை ஆடை இடுப்பில் சுற்றி கெண்டைக்கால் வரை நீண்டுள்ளது.
இந்த நடுகல்லில் உள்ள ஆண் இப்பகுதியில் நாயக்கர் அரசின் நிர்வாகத்தில் முக்கிய அதிகாரியாக பணிபுரிந்திருக்கக்கூடும் என்றனர். இதேபோன்று மற்ற பகுதியிலும் வேறு ஏதேனும் தொல்லியல் ஆய்வுகள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.