தமிழ்நாடு செய்திகள்

தமிழக கோர்ட்டுகளில் 16 லட்சம் வழக்குகள் தேக்கம்

Published On 2024-09-06 07:47 IST   |   Update On 2024-09-06 07:47:00 IST
  • தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது என்பது சட்டத்தின் கோட்பாடு.
  • தமிழக கோர்ட்டு களில் மொத்தம் 9 லட்சத்து 8 ஆயிரத்து 540 சிவில் வழக்குகள் விசாரணையில் உள்ளன.

சென்னை:

சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கை, நீதி மன்றங்கள்தான்.

நமது நாடு சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு முன்பாக கடந்த 1862-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ந்தேதி உதயமானது தான் சென்னை ஐகோர்ட்டு. அன்று முதல் நீதி தேவதையின் இருப்பிடமாக திகழ்ந்து வருவதுடன், தன்னுடைய ஆணித்தரமான தீர்ப்பால் பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமான நீதியை வழங்கி வருகிறது.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது என்பது சட்டத்தின் கோட்பாடு. அதற்கு இணங்க, பல வழக்குகள் முடிவுக்கு வருவதில் அதிக காலம் எடுத்துக்கொள்ளப்படுவதாக பொதுவான குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.

சென்னை ஐகோர்ட்டின் முதன்மை அமர்வு, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை மற்றும் தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 15 லட்சத்து 96 ஆயிரத்து 614 சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னையை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஒருவர் விண்ணப்பித்து பெற்ற விவரம் மூலம் தெரியவந்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டின் முதன்மை அமர்வு, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 104 சிவில் வழக்குகளும், 24 ஆயிரத்து 591 கிரிமினல் வழக்குகளும் என 2 லட்சத்து 3 ஆயிரத்து 695 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கீழமை நீதிமன்றங்களில் 7 லட்சத்து 29 ஆயிரத்து 436 சிவில் வழக்குகளும், 6 லட்சத்து 63 ஆயிரத்து 483 கிரிமினல் வழக்குகளும் என 13 லட்சத்து 92 ஆயிரத்து 919 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

இதன்படி தமிழக கோர்ட்டு களில் மொத்தம் 9 லட்சத்து 8 ஆயிரத்து 540 சிவில் வழக்குகள் விசாரணையில் உள்ளன. இதேபோல 6 லட்சத்து 88 ஆயிரத்து 74 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

கிரிமினல் வழக்குகளைவிட சிவில் வழக்குகளே தமிழகத்தில் அதிகமாக நிலுவையில் இருக்கின்றன.

சென்னை ஐகோர்ட்டை பொறுத்தமட்டில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்கள் 75. இதில் தற்போது 62 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 13 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. கடந்த மாதம் 20-ந்தேதி வரையிலான நிலவரப்படி அனுமதிக்கப்பட்ட மாவட்ட நீதிபதி பணியிடங்கள் 360. இதில் 87 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மூத்த சிவில் நீதிபதிகள் பணியிடங்களை பொறுத்தமட்டிலும் கடந்த மாதம் 20-ந்தேதி வரையிலும் 365 அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 103 பணியிடங்களும், சிவில் நீதிபதிகளை பொறுத்தமட்டில் அனுமதிக்கப்பட்ட 644 பணியிடங்களில் 156 பணியிடங்களும் காலியாக உள்ளன. காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை விரைவாக நிரப்பி, தாமதமின்றி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Tags:    

Similar News