தமிழ்நாடு செய்திகள்

சோழவரம் அருகே குடோனில் பதுக்கி வைத்த 100 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-09-09 12:49 IST   |   Update On 2022-09-09 12:49:00 IST
  • ரேசன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம், காரும் சிக்கியது.
  • அரிசி ஆலையின் உரிமையாளர் குறித்தும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

பொன்னேரி:

சோழவரம் அடுத்த ஆங்காடு கிராமத்தில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையிலான வருவாய் துறையினர் ஆங்காடு கிராமத்தில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள குடோனில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி பாலிஷ் செய்து வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக ஆந்திர பதிவு எண் கொண்ட லாரியில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு தயார் நிலையில் இருந்ததும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து லாரியுடன் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் அரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்ட சுமார் 100 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ரேசன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம், காரும் சிக்கியது. இது தொடர்பாக அரிசி ஆலையில் வேலை பார்த்து வரும் வட மாநில தொழிலாளர்கள் 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரிசி ஆலையின் உரிமையாளர் குறித்தும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆலையில் பதுக்கிய அரிசி மூட்டைகள் அனைத்தும் எடுத்த பின்னர் அரிசி ஆலைக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது வட்ட வழங்கல் அதிகாரி சண்முகசுந்தரம், தனிப்படை பிரிவு அதிகாரி குமார் உடன் இருந்தனர்

Tags:    

Similar News