டென்னிஸ்
null

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் சின்னர், ஸ்வியாடெக்- கவூப் அதிர்ச்சி தோல்வி

Published On 2025-09-02 10:39 IST   |   Update On 2025-09-02 10:46:00 IST
  • சின்னர் 6-1, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
  • ஸ்வியாடெக் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

நியூயார்க்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜானிக் சின்னர் (இத்தாலி) 4-வது சுற்றில் கஜகஸ்தானை சேர்ந்த 23-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் பப்ளிக்கை எதிர் கொண்டார்.

இதில் சின்னர் 6-1, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 21 நிமிட நேரமே தேவைப்பட்டது.

மற்ற 4-வது சுற்று ஆட்டங்களில் 8-வது வரிசையில் உள்ள அலெக்ஸ் டி மினாவுர் ( ஆஸ்திரேலியா), 10-ம் நிலை வீரர் லாரென்சோ முசெட்டி ( இத்தாலி) ஆகியோர் வெற்றி பெற்று கால் இறுதியில் நுழைந்தனர்.

15-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) அதிர்ச்சிகரமாக தோற்றார். கனடாவை சேர்ந்த 25-ம் நிலை வீரரான பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் 7-5, 6-3,6-4 என்ற நேர் செட் கணக்கில் அவரை வீழ்த்தினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) 4-வது சுற்றில் ரஷியாவை சேர்ந்த எகடெரினா அலெக்சாண்ட்ரோவாவை சந்தித்தார். இதில் ஸ்வியாடெக் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 4 நிமிட நேரமே தேவைப்பட்டது.

பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், 3-வது வரிசையில் உள்ள வருமான கோகோ கவூப் ( அமெரிக்கா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். 23-ம் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான் ) 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனான கவூப்பை வீழ்த்தினார்.

8-ம் நிலை வீராங்கனை அமண்டா அனிஸ்மோவாவும் ( அமெரிக்கா) கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் ஸ்வியாடெக்குடன் மோதுகிறார்.

Tags:    

Similar News