ஆஸ்திரேலியா ஓபன்: அல்காரஸ், ஸ்வெரேவ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
- அல்காரஸ் 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
- ஸ்வெரேவ் 3-1 என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளில் நம்பர் ஒன் வீரர் அல்காரஸ், 3-ம் நிலை வீரரான ஸ்வெரேவ் உள்ளிட்ட வீரர்கள் முதல் சுற்றில் விளையாடினர்.
ஸ்பெயின் வீரரான கார்லஸ் அல்காரஸ் ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டனை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-3 என அல்காரஸ் எளிதாக கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் அல்காரஸ்க்கு வால்டன் ஈடுகொடுத்து விளையாடினார். இதனால் டை-பிரேக்கர் வரை சென்றது. என்றாலும் அல்காரஸ் 7(7)- 6(2) எனக் கைப்பற்றினார். 3-வது செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றி 3-0 என நேர்செட் கணக்கில் கைப்பற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்த அலேக்சாண்டர் ஸ்வெரேவ், கேப்ரியல் டியாலோவை எதிர்கொண்டார். 3-ம் நிலை வீரரான ஸ்வெரேவ்-க்கு டியாலோ முதல் செட்டில் அதிர்ச்சி அளித்தார். டை-பிரேக்கர் வரை சென்ற நிலையில் ஸ்வெரேவ் 6(1)-7(7) என முதல் செட்டை இழந்தார்.
பின்னர் சுதாரித்துக் கொண்ட ஸ்வெரேவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2-வது செட்டை 6-1 எனவும், 3-வது செட்டை 6-4 எனவும், 4-வது செட்டை 6-2 எனவும் கைப்பற்றி 3-1 என ஸ்வெரேவ் வெற்றி பெற்றார்.