காது கேளாதோர் ஒலிம்பிக்கில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார் தமிழக வீராங்கனை ஜெர்லின்
- 3 முறை தங்கப்பதக்கம் வென்றவரான ஜெர்லின் மதுரையைச் சேர்ந்தவர்.
- முதல்முறையாக அணிக்கு தலைமை தாங்குவது உண்மையிலேய சிறப்பு வாய்ந்தது’ என ஜெர்லின் கூறினார்.
புதுடெல்லி:
25-வது காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 15-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 111 பேர் கொண்ட இந்திய அணியினர் தடகளம், பேட்மிண்டன், கோல்ப், ஜூடோ, கராத்தே, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், தேக்வாண்டோ, மல்யுத்தம் மற்றும் டென்னிஸ் ஆகிய பந்தயங்களில் பங்கேற்கிறார்கள். இதன் முதல் குழுவினர் இன்று டோக்கியோ புறப்படுகிறார்கள்.
இந்த போட்டியின் தொடக்க விழாவில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் பேட்மிண்டன் வீராங்கனையான ஜெர்லின் அனிகா ஜெயரட்சகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 3 முறை தங்கப்பதக்கம் வென்றவரான ஜெர்லின் மதுரையைச் சேர்ந்தவர். 'தேசிய கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்புக்கு என்னை தேர்வு செய்திருப்பது எனக்கு பெருமைக்குரிய, உணர்வுபூர்வமான தருணம். இது எனது 3-வது ஒலிம்பிக். ஆனால் முதல்முறையாக அணிக்கு தலைமை தாங்குவது உண்மையிலேய சிறப்பு வாய்ந்தது' என ஜெர்லின் குறிப்பிட்டார்.