விளையாட்டு

பாகிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் இலங்கை அணி வீரர்கள்- எச்சரிக்கை விடுத்த நிர்வாகம்

Published On 2025-11-13 08:45 IST   |   Update On 2025-11-13 08:45:00 IST
  • இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.
  • இலங்கை அணி அங்கு தொடர்ந்து விளையாடுமா? என்ற சந்தேகம் நிலவியது.

பாகிஸ்தான்- இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 299 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 293 ரன்களே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 6 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் இன்று (பிற்பகல் 3 மணி) நடக்கிறது.

இதற்கிடையே, இஸ்லாமாபாத்தில் கோர்ட்டு வளாகத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். இதனால் இலங்கை அணி அங்கு தொடர்ந்து விளையாடுமா? என்ற சந்தேகம் நிலவியது.

இதனை தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு காரணமாக பாதுகாப்பு கவலை இருப்பதாகவும், உடனடியாக நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் 8 இலங்கை வீரர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

பதற்றமான சூழலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கான இலங்கை தூதர் பிரெட் செனவிரத்னே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை மந்திரியுமான மொசின் நக்வியை சந்தித்து பாதுகாப்பு பிரச்சனை குறித்து ஆலோசித்தார். அப்போது அவர் இலங்கை வீரர்களுக்கு அரசு விருந்தினர்கள் போல் உயரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்தார்.

பின்னர் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட மொசின் நக்வி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி உத்தரவிட்டார். அத்துடன் ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவ படையினரை பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க அறிவுறுத்தி இருக்கிறார்.

சில இலங்கை வீரர்கள் தாயகம் திரும்ப விரும்புவதாக தங்களது கிரிக்கெட் வாரியத்திடம் கூறினர். அவர்களை சந்தித்து பாதுகாப்பு குறித்து எந்தவித அச்சமும் கொள்ள வேண்டாம் என்று மொசின் நக்வி கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்ப கோரிக்கை வைத்த இலங்கை வீரர்களை அணி நிர்வாகம் எச்சரித்துள்ளது. தொடரில் இருந்து பாதியில் வெளியேறக் கூடாது எனவும், விலகினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை அணி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Tags:    

Similar News