விளையாட்டு

ஒரு நாள் கிரிக்கெட்டில் கோலி, ரோகித் தொடர்ந்து விளையாட வேண்டும்- கங்குலி

Published On 2025-08-11 08:25 IST   |   Update On 2025-08-11 08:25:00 IST
  • செப்டம்பர் 9-ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விளையாட உள்ளனர்.
  • ஆசிய கோப்பையை வெல்வதற்கு இந்தியாவுக்கே வாய்ப்பு அதிகம் என்பது எனது கருத்து.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், 'டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரே கடைசி சர்வதேச போட்டியாக இருக்கக்கூடும்' என தகவல்கள் வெளியாகி உள்ளதே என்று கேட்ட போது, 'அது பற்றி எனக்கு தெரியாது. அதனால் அது குறித்து கருத்து தெரிவிக்கமாட்டேன். யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்கள் விளையாடுவார்கள். கோலியும், ரோகித்தும் நன்றாக ஆடி ரன்குவிக்கும் பட்சத்தில், அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். விராட் கோலியின் ஒரு நாள் போட்டி சாதனை தனித்துவமானது. ரோகித் சர்மாவும் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் நிறைய சாதித்து இருக்கிறார்' என்றார்.

மேலும் கங்குலி கூறுகையில், 'ஐ.பி.எல். முடிந்த உடனே இந்திய அணியினர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டில் விளையாடினார்கள். இப்போது சில வாரங்கள் ஓய்வு கிடைத்திருக்கிறது. அடுத்ததாக செப்டம்பர் 9-ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விளையாட உள்ளனர்.

இந்தியா மிகவும் பலம் வாய்ந்த அணி. சிவப்புநிற பந்து கிரிக்கெட்டில் வலுவாக இருக்கிறது என்றால், வெள்ளை நிற பந்து போட்டியில் அதை விட வலுவாக திகழ்கிறது. எனவே ஆசிய கோப்பையை வெல்வதற்கு இந்தியாவுக்கே வாய்ப்பு அதிகம் என்பது எனது கருத்து. அதுவும் துபாய் போன்ற ஆடுகளத்தில் இந்தியாவை வீழ்த்துவது கடினம்' என்றார்.

பெங்கால் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பது குறித்து கேட்ட போது, 'உறுப்பினர்கள் விரும்பினால் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வேன்' என்றார்.

Tags:    

Similar News