பீகாரில் நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்கும் என தகவல்
- 12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பா் 7 வரை பீகாரில் நடைபெறுகிறது.
- ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.
பீகார், தமிழ்நாட்டில் நடைபெறும் ஆசிய,ஜூனியர் உலக கோப்பையில் பாகிஸ்தான் ஹாக்கி அணி பங்கேற்கும் விசாவுக்கு விண்ணப்பித்து இருப்பதாக ஆக்கி இந்தியா உறுதிப்படுத்தியது
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 27-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை பீகார் மாநிலம் ராஜ்கிரியில் நடக்கிறது. ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறுகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தப் போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டிகளுக்கு அணிகளை அனுப்புவது இல்லை என்று பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இது தொடர்பாக சர்வதேச மற்றும் ஆசிய ஹாக்கி கூட்டமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம் கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப் படுகிறது.
இந்த நிலையில் ஆசிய கோப்பை மற்றும் ஜூனியர் உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் என்று ஹாக்கி இந்தியா உறுதிப்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக ஹாக்கி இந்தியா பொருளாளரும், தமிழ்நாடு ஆக்கி அமைப்பின் தலைவருமான சேகர் மனோகர் கூறியதாவது:-
பாகிஸ்தான் சீனியர் மற்றும் ஜூனியர் அணிகள் நிச்சயமாக இந்தியா வரும். அவர்கள் ஏற்கனவே விசா விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். சீனியர் அணி 18 வீரர்கள் மற்றும் 7 துணை ஊழியர்களை கொண்ட குழுவுடன் விண்ணப்பித்துள்ளது.
உலக கோப்பைக்கான இந்திய ஜூனியர் அணியை தயார்படுத்துவதற்கான பயிற்சி முகாம் அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.