இந்தியா-இலங்கை பெண்கள் அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது
- சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியில் இளம் வீராங்கனைகள் அதிகம் இடம் பிடித்துள்ளனர்.
- வலுவான இந்திய அணியை சமாளிப்பது இலங்கை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் எனலாம்.
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதில் இந்தியா-இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.
சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் துணை கேப்டன் மந்தனா, தீப்தி ஷர்மா, சினே ராணா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியில் இளம் வீராங்கனைகள் அதிகம் இடம் பிடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகுவதற்கு இரு அணிகளும் இந்த தொடரை சரியாக பயன்படுத்தி கொள்ள தீவிரம் காட்டும். வலுவான இந்திய அணியை சமாளிப்பது இலங்கை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் எனலாம்.
இவ்விரு அணிகளும் இதுவரை 26 இருபது ஓவர் போட்டியில் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. இதில் 20-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.