விளையாட்டு

தொடரில் முன்னிலை பெறப்போவது யார்?: இந்தியா-இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

Published On 2025-07-10 08:01 IST   |   Update On 2025-07-10 08:01:00 IST
  • பணிச்சுமையால் கடந்த டெஸ்டில் ஓய்வு எடுத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த டெஸ்டில் ஆட இருப்பது அணிக்கு கூடுதல் பலமாகும்.
  • இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்- தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்திலும், பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று தொடங்குகிறது.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தொடக்க டெஸ்டில் சிறப்பாக விளையாடிய போதிலும் இரு இன்னிங்சிலும் கடைசி கட்டத்தில் விக்கெட்டுகளை மளமளவென இழந்தது பின்னடைவாக அமைந்தது. அத்துடன் சில முக்கியமான கேட்ச் வாய்ப்புகளையும் வீணடித்தனர். இதனால் 371 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இத்தகைய தவறுகளுக்கு எல்லாம் பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய வீரர்கள் பரிகாரம் தேடிக் கொண்டனர். குறிப்பாக முதல் இன்னிங்சில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 211 ரன்களுடன் தடுமாறிய போது கேப்டன் சுப்மன் கில்லுடன் ரவீந்திர ஜடேஜா (89 ரன்), வாஷிங்டன் சுந்தர் (42 ரன்) ஆகியோர் கணிசமான பங்களிப்பை அளித்து அணியை 587 ரன்களுக்கு தூக்கி நிறுத்தினர். 2-வது இன்னிங்சில் இதே போல் சரிவுக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதை விரட்ட முடியாமல் இங்கிலாந்து 271 ரன்னில் பணிந்தது.

கேப்டன் சுப்மன் கில்லின் மலைப்பான பேட்டிங்கும் (269 மற்றும் 161 ரன்), ஆகாஷ் தீப்பின் மிரட்டல் பந்து வீச்சும் (10 விக்கெட்) இந்தியாவின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தன. அத்துடன் பர்மிங்காமில் டெஸ்டில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையும் கிடைத்தது.

இதே உற்சாகத்துடன் இந்திய வீரர்கள் புகழ்பெற்ற லண்டன் லார்ட்சில் களம் இறங்குகிறார்கள். ஆனால் முந்தைய ஆடுகளங்களுடன் ஒப்பிடும் போது லார்ட்ஸ் சற்று வித்தியாசமானது. இங்கு ஓரளவு புற்கள் இருப்பதால் வேகப்பந்து வீச்சும் எடுபடும். இதனால் முதல் இன்னிங்சில் 400 ரன்கள் எடுத்தாலே அது சவாலான ஸ்கோராக இருக்கும். இதற்கு ஜெய்ஸ்வாலும், லோகேஷ் ராகுலும் நல்ல அடித்தளம் ஏற்படுத்தி தர வேண்டியது அவசியமாகும். 8 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் அணிக்கு திரும்பிய கருண் நாயர் இன்னும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. தனது இடத்தை தக்க வைக்க அவரும் ஜொலிக்க வேண்டியது முக்கியம். சாதனையை நோக்கி பயணிக்கும் சுப்மன் கில் இன்னும் 18 ரன் எடுத்தால் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற சிறப்பை பெறுவார்.

பணிச்சுமையால் கடந்த டெஸ்டில் ஓய்வு எடுத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த டெஸ்டில் ஆட இருப்பது அணிக்கு கூடுதல் பலமாகும். இதனால் பிரசித் கிருஷ்ணா வெளியே உட்கார வைக்கப்படுவார். வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக குல்தீப் யாதவை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டாங்குக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். 2021-ம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு அவர் விளையாடப்போகும் முதல் டெஸ்ட் இதுவாகும்.

பர்மிங்காம் போட்டியில் இங்கிலாந்து அணியில் டாப்-4 வீரர்களான பென் டக்கெட், கிராவ்லி, ஆலி போப், ஜோ ரூட் ஒருசேர சோபிக்கவில்லை. இதனால் தான் அவர்களால் இந்தியாவை நெருங்க முடியவில்லை. மீண்டும் ரன்வேட்டை நடத்த அவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஜோ ரூட்டுக்கு இந்த மைதானம் ராசியானது. இங்கு 7 சதமும், 7 அரைசதமும் அடித்துள்ளார்.

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'சரிவில் இருந்து மீண்டு இந்தியாவுக்கு கடுமையான பதிலடி கொடுக்க முயற்சிப்போம். சுப்மன் கில் முதல் இரு டெஸ்டிலும் சிறப்பாக ஆடி ரன் குவித்தார். அவர் உள்பட அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களையும் கட்டுப்படுத்த திட்டங்கள் வகுத்துள்ளோம். டெஸ்ட் அணிக்கு ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் திரும்புவது உற்சாகம் அளிக்கிறது. இங்கிலாந்து அணிக்காக அவர் விளையாடும் போதெல்லாம் குறிப்பாக குறுகிய வடிவிலான போட்டிகளில் பந்தை கையில் எடுத்து விட்டாலே ஆட்டத்தின் போக்கை மாற்றி விடுவார். எதிரணியினர் கூட இதை உணர்ந்து இருப்பார்கள். ஏனெனில் அவர் எப்படிப்பட்டவர் என்பது அவர்களுக்கு தெரியும்' என்றார்.

மொத்தத்தில் தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் சுவாரசியத்துக்கு பஞ்சமிருக்காது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா: ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், கருண் நாயர், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், நிதிஷ்குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி சுமித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், சோயிப் பஷீர்.

இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Tags:    

Similar News