ஜோகோவிச்சுக்கு சிறப்பு விருதை வழங்கினார் ரொனால்டோ
- துபாயில் குளோப் சாக்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
- மத்திய கிழக்கு நாடுகளின் சிறந்த வீரராக ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார்.
துபாய்:
துபாயில் நடந்த குளோப் சாக்கர் விருது விழாவில் மத்திய கிழக்கு நாடுகளின் சிறந்த வீரராக ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர், 1000 கோல் இலக்கை எட்டும் வரை ஓய்வு பெறப் போவதில்லை என்பதை சூசகமாக தெரிவித்தார்.
மான்செஸ்டர் யுனைடெட், யுவன்டஸ் உள்பட அனைத்து கிளப் அணிக்காக 813 மற்றும் போர்ச்சுகல் அணிக்கு 143 கோல்கள் சேர்த்து 1,297 போட்டிகளில் 956 கோல் அடித்து முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் மெஸ்ஸி (896 கோல்) உள்ளார்.
ரொனால்டோவுக்கு 1000 கோல் எட்ட இன்னும் 44 கோல் தான் தேவை. வரும் 2026-ல் நடக்கும் உலகக் கோப்பை தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், துபாயில் நடந்த 2025 குளோப் சாக்கர் விருது விழாவில் முதல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட குளோப் ஸ்போர்ட்ஸ் விருதை டென்னிஸ் ஜாம்பவான் நோவாக் ஜோகோவிச் வென்றார்.
கால்பந்துக்கு அப்பாற்பட்ட சாதனைகளை மதிப்பிடும் இந்த விருதை கிரிஸ்டியானோ ரொனால்டோ அவருக்கு வழங்கினார். அவரது அசாதாரணமான அர்ப்பணிப்பு, நீண்ட கால வெற்றி மற்றும் பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும் விளையாட்டு வீரர் என்ற அடிப்படையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
விருதை வழங்கி பேசிய ரொனால்டோ, எனக்கு அவர் ஒரு உதாரணம். அவர் தன்னிடமிருந்து வரும் வார்த்தைகளைப் பேசுகிறார். எனவே அவர் இதற்கு தகுதியானவர் என நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் இந்த தலைமுறைக்கு, அனைத்து தலைமுறைகளுக்கும், வரவிருக்கும் தலைமுறைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என தெரிவித்தார்.