வீடியோ: ஹாரிஸ் ராஃப் சைகைக்கு பங்கமாக பதிலடி கொடுத்த அர்ஷ்தீப் சிங்
- சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.
- அந்த போட்டியில் ஹாரிஸ் ராஃப் விமானம் விழுந்து நொறுங்குவது போன்ற சைகையை செய்தார்.
துபாய்:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் துபாயில் கடந்த 21-ந் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில்லிடம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் வம்பிழுத்தார். அதற்கு இருவரும் தக்க பதிலடி கொடுத்தனர். அத்துடன் இதனை பார்த்த இந்திய ரசிகர்களும் பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்த ஹாரிஸ் ராஃப்புக்கு எதிராக கோலி.. கோலி.. என கூச்சலிட்டு கலாய்த்தனர்.
அதற்கு ஹாரிஸ் ரவூப் 6 விரல்களைக் காட்டி 'விமானம் விழுந்து நொறுங்குவது' போன்ற சைகையை செய்தார். அதாவது காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதற்கு பதிலடியாக, "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி தாக்குதலை மேற்கொண்டது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரே நாள் இரவில் மொத்தம் 9 தீவிரவாத முகாம்கள் இதில் அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது ஆறு இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பலமுறை கூறியது.
அந்த போலியான செய்தியை வைத்துக்கொண்டு '6 விமானங்கள் வீழ்த்தப்பட்டது மறந்து விட்டதா?' என்ற வகையில் ஹாரிஸ் ராஃப் சைகை செய்தார். அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் கோலி.. கோலி.. என்று கூச்சலிட்டு அவருக்கு மீண்டும் பதிலடி கொடுத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் ஹாரிஸ் ராஃப் சைகைக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவரது சைகை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.