எனது மகனுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை: வாஷிங்டன் சுந்தர் தந்தை ஆதங்கம்..!
- ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் எனது மகன் அணியில் இருந்து நீக்கப்படுகிறார்.
- வேறு எந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கும் இந்த மாதிரியான அணுகுமுறை பின்பற்றப்பட்டிருக்கிறதா?
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் வாஷிங்டன் சுந்தர் (101 நாட்அவுட்), ஜடேஜா (107 நாட்அவுட்) ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம் அடித்ததால் இந்தியா டெஸ்ட் போட்டியை டிரா செய்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. தொடரை இழக்கவில்லை. கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்ய முடியும்.
இந்த நிலையில் எனது மகன் சிறப்பாக விளையாடிய போதிலும், தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை என வாஷிங்டன் சுந்தரின் தந்தை தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வாஷிங்டன் சுந்தர் தந்தை கூறியதாவது:-
வாஷிங்டன் சுந்தர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறார். எனினும், மக்கள் அவரை தவிர்க்கவும், அவருடைய ஆட்டத்திறனையும் தவிர்க்க முனைகிறார்கள். மற்ற வீரர்கள் தொடர்ந்து வாய்ப்பு பெறுகிறார்கள். எனது மகனுக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. மான்செஸ்டர் டெஸ்ட் 2ஆவது இன்னிங்சில் 5ஆவது வீரராக களம் இறங்கியது போல் தொடர்ந்து அதே இடத்தில் களம் இறக்கப்பட வேண்டும். தொடர்ந்து ஐந்து முதல் 10 வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டுக்கு என் மகன் தேர்வு செய்யப்படாதது வியப்பளிக்கிறது.
ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் எனது மகன் அணியில் இருந்து நீக்கப்படுகிறார். இது நியாயமானது அல்ல. 2021 ஆம் ஆண்டு சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக அதிகமாக டர்ன் ஆகக்கூடிய ஆடுகளத்தில் ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் அடித்தார். அகமதாபாத் டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் அடித்தார். அந்த இரண்டையும் சதமாக மாற்றியிருந்தாலும் நீக்கப்பட்டிப்பார்.
வேறு எந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கும் இந்த மாதிரியான அணுகுமுறை பின்பற்றப்பட்டிருக்கிறதா? இதற்கெல்லாம் பிறகு அவர் மிகவும் வலிமையானவராக மாறிவிட்டார், அதன் விளைவாகத்தான் இப்போது மக்கள் இந்த செயல்திறனைப் பார்க்கிறார்கள்.
இவ்வாறு வாஷிங்டன் சுந்தர் தந்தை தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
வாஷிங்டன் சுந்தர் 2017ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 25 வயதாகும் அவர் 12 டெஸ்ட், 23 ஒருநாள் மற்றும் 54 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.