8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி கோவையில் நாளை தொடக்கம்
- கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் ஆகிய 4 இடங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
- கோவையில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
கோவை:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். (தமிழ்நாடு பிரீமியர் லீக்) 20 ஓவர் போட்டி போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இதுவரை 8 தொடர் முடிந்துள்ளன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிக பட்சமாக 4 முறையும் (2017, 2019, 2021, 2022) கோவை கிங்ஸ் 2 தடவையும் (2022, 2023), டூட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018), திண்டுக்கல் டிராகன்ஸ் (2024) தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டம் பெற்றன.
9-வது டி.என்.பி.எல். போட்டி நாளை ( வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்தப் போட்டி தொடர் ஜூலை 6-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் , திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், திருச்சி கிராண்டு சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் ஆகிய 4 இடங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. கோவையில் 8 ஆட்டங்களும் (ஜூன் 5 முதல் 11 வரை) , சேலத்தில் 9 போட்டிகளும் (13 முதல் 19 வரை), நெல்லையில் 7 ஆட்டங்களும் (21 முதல் 26 வரை) திண்டுக்கல்லில் இறுதி ஆட்டம், பிளே ஆப் உள்பட 8 போட்டிகளும் (ஜூன் 28 முதல் ஜூலை 6 வரை) நடக்கிறது.
ஒவ்வொரு அணியும், மற்ற அணிளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். லீக் சுற்று 29-ந்தேதியுடன் முடிகிறது. ஜூலை 1-ந்தேதி குவாலிபையர்1' ஆட்டமும், 2-ந்தேதி எலிமினேட்டர் போட்டியும், 4-ந்தேதி குவாலிபையர்2' ஆட்டமும், இறுதிப்போட்டி ஜூலை 6-ந்தேதியும் நடைபெறுகிறது.
கோவையில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் வெற்றியுடன் தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. மறுநாள் 6-ந்தேதி சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.