கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை: தென்ஆப்பிரிக்காவுக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து

Published On 2026-02-14 20:48 IST   |   Update On 2026-02-14 20:48:00 IST
  • மார்க் சாப்மேன் 26 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
  • பின் ஆலன் 17 பந்தில் 31 ரன்கள் விளாசினார்.

டி20 உலகக் கோப்பையில் இன்றைய 3-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி நியூசிலாந்து டிம் செய்பெர்ட், பின் ஆலன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டிம் செய்பெர்ட் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா 13 ரன்களில் வெளியேறினார்.

பின் ஆலன் 17 பந்தில் 31 ரன்கள் விளாசினார். கிளென் பிளிப்ஸ் 1 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தாலும் ரன்ரேட் 9-க்கு அதிகமாக இருந்தது.

5-வது விக்கெட்டுக்கு சாப்மேன் உடன் டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. குறிப்பாக மார்க் சாப்மேன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 26 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து 14 ஓவரில் 138 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து டேரில் மிட்செல் 24 பந்தில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அதன்பின் நியூசிலாந்தின் ரன்ரேட்டில் மந்தநிலை ஏற்பட்டது. சான்ட்னெர் 4 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் ஒரு கட்டத்தில் 200 ரன்கள் வரை செல்லும் என்ற நிலையில் இருந்த நியூசிலாந்து 170 ரன்களை தாண்டுமா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

19-வது ஓவரில் யான்சன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இவர் 4 ஓவரில் 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார். போஸ் கடைசி ஓவரில் 10 ரன்கள் விட்டுக்கொடுக்க நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்துள்ளது. ஜேம்ஸ் நீஷம் 15 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Tags:    

Similar News