கிரிக்கெட் (Cricket)

2வது இன்னிங்சிலும் ஹொசைன் ஷான்டோ சதம்: டிராவில் முடிந்த காலே டெஸ்ட்

Published On 2025-06-22 03:51 IST   |   Update On 2025-06-22 03:51:00 IST
  • வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்தது.
  • இலங்கை அணியின் தரிந்து ரத்னநாயக 3 விக்கெட் வீழ்த்தினார்.

காலே:

வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான தொடர்களிலும் விளையாட உள்ளது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றன.

முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, வங்கதேச அணி முதலில் களமிறங்கியது. கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 148 ரன்னும், முஷ்பிகுர் ரஹீம் 163 ரன்னும், லிட்டன் தாஸ் 90 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 495 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இலங்கை அணி சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், மிலன் பிரியநாத் ரத்நாயக்க, தரிந்து ரத்நாயக்க தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 485 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா பொறுப்புடன் ஆடி சதம் கடந்து 187 ரன்னில் அவுட்டானார். தினேஷ் சண்டிமால் அரை சதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார்.

கமிந்து மெண்டிஸ் 87 ரன்னில் ஆட்டமிழந்தார்,

வங்கதேசம் அணி சார்பில் நயீம் ஹாசன் 5 விக்கெட்டும், ஹசன் மஹ்முது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஹொசைன் சான்டோ மீண்டும் சதமடித்தார். ஷட்மான் இஸ்லாம் அரை சதமடித்து 76 ரன்கள் எடுத்தார். முஷ்பிகுர் ரஹ்மான் 49 ரன்னில் அவுட்டானார்.

296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. 4 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதையடுத்து, காலே டெஸ்ட் டிராவில் முடிந்தது.

ஆட்ட நாயகனாக வங்கதேசத்தின் ஹொசைன் ஷாண்டோ அறிவிக்கப்பட்டார். இலங்கையில் ஏஞ்சலோ மேத்யூஸ் இந்த டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெற்றார்.

Tags:    

Similar News