ஒரு தொடரை வைத்து ஒட்டுமொத்த வீரர்களை மதிப்பிட முடியாது- சுப்மன் கில்
- நாங்கள் ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெற்றியைப் பெற்றிருக்கிறோம்.
- டி20 உலக கோப்பையை வென்று இருக்கிறோம்.
மும்பை :
இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் வியாழக்கிழமை நாக்பூரில் தொடங்குகிறது. இந்திய அணி கடந்த 2024-ம் ஆண்டு வெறும் மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் மட்டுமே விளையாடியது. அதிலும் ஒரு போட்டியில் கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை.
இதனால் பல மாதங்களுக்கு பிறகு இந்திய அணி ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுகிறது. ஆஸ்திரேலிய தொடரில் சொதப்பிய விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தற்போது ஒருநாள் தொடரில் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
இந்தநிலையில் ஒரு தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடாததை வைத்து ஒட்டுமொத்த வீரர்களை மதிப்பிட முடியாது என்று செய்தியாளர் கேள்விக்கு இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் காட்டமாக பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
எங்கள் அணியில் பல வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவித்து இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய தொடரில் நாங்கள் எதிர்பார்ப்பை சரியாக பூர்த்தி செய்யவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கின்றேன். இருப்பினும் நாங்கள் அங்கு நல்ல கிரிக்கெட்டுகளை விளையாடினோம்.
கடைசி டெஸ்டில் கடைசி ஆட்டத்தில் பும்ரா இடம்பெறாமல் போனது எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது. ஒருவேளை பும்ரா அந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தால் நாங்கள் நிச்சயம் வெற்றி பெற்று இருப்போம். தொடரின் முடிவே மாறி இருக்கும். நாங்கள் அந்தத் தொடரை சமன் செய்திருப்போம்.
இப்பொழுது எழும் எந்த விமர்சனமும் அப்போது எழுந்திருக்காது. எனவே ஒரு போட்டி அல்லது ஒரு நாள் நாங்கள் சரியாக செயல்படவில்லை என்றால் அது ஒட்டுமொத்த அணியையும் விவரிக்காது.
நாங்கள் ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெற்றியைப் பெற்றிருக்கிறோம். நாங்கள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை தழுவினோம். தற்போது டி20 உலக கோப்பையை வென்று இருக்கிறோம். எனவே எங்களைப் பற்றி விமர்சனம் செய்யும் முன் இதை எல்லாம் யாரும் மறந்து விட வேண்டாம்.
என்று சுப்மன் கில் கூறினார்.