சுஞ்சு சாம்சன்தான் தொடக்க வீரராக களம் இறக்கப்பட வேண்டும்: ரவி சாஸ்திரி சொல்கிறார்
- ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்.
- சுப்மன் களம் இறங்கினால், சஞ்சு சாம்சனின் தொடக்க இடத்திற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு.
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்தியா நாளைமறுதினம் (10ஆம் தேதி) முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை எதிர்கொள்கிறது.
இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி விளையாடி வருகின்றனர். ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சஞ்சு சாம்சனின் தொடக்க இடத்திற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சஞ்சு சாம்சனைத்தான் தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறியதாவது:-
டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் வலுவான சாதனை வைத்துள்ளார். அவரை தொடக்க வீரர் வரிசையில் இருந்து நீக்க சுப்மன் கில்லுக்கு கூட கடினமான ஒன்றாக இருக்கும். சுப்மன் கில் மற்றொரு வீரருக்குப் பதிலாக அணியில் களம் இறங்கலாம். ஆனால், சுப்மன் கில்லை தொடக்க வீரராக தனித்து விட வேண்டும். அவர் இந்திய அணிக்காக விளையாடிய வகையில், தொடர்நது விளையாடி அனுமதிக்க வேண்டும். அதிக ரன்கள், சதங்களுடன் தொடக்க வீரர் வரிசையில் நிலையான ஆட்டத்தை கொண்டுள்ளார்.
இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.