டி20 உலகக் கோப்பையில் சதம் விளாசிய 2-வது பாகிஸ்தான் வீரர்- பர்ஹான் புதிய சாதனை
- நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பர்ஹான் சதம் விளாசினார்.
- டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சதம் அடித்த 2-வது பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை பர்ஹான் படைத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை 2026 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 35-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பர்ஹான் 100 ரன்கள் அடித்து அசத்தினார்.
இதன்மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த 2-வது பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை பர்ஹான் படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக வங்கதேசத்துக்கு எதிராக அகமது ஷெஹ்சாத் சதம் விளாசி இருந்தார்.
மேலும் டி20 உலகக் கோப்பையில் சதம் விளாசிய ஆசிய வீரர்களில் இவர் 6-வது வீரராகவும் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக வங்கதேச அணியை சேர்ந்த தமீம் இக்பால், பாகிஸ்தானை சேர்ந்த அகமது ஷெஹ்சாத், இலங்கையை சேர்ந்த ஜெயவர்தனே, இந்தியாவை சேர்ந்த சுரேஷ் ரெய்னா, இலங்கையை சேர்ந்த பதும் நிசங்கா ஆகியோர் சாதனை பட்டியலில் உள்ளனர்.