கிரிக்கெட் (Cricket)

ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணிக்கு சச்சின், கோலி வாழ்த்து

Published On 2025-10-31 11:45 IST   |   Update On 2025-10-31 11:45:00 IST
  • ஜெமிமா மற்றும் ஹாமன்பிரீத் கவுர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என சச்சின் கூறினார்.
  • ஆஸ்திரேலியா போன்ற வலிமையான எதிராளியை எதிர்த்து இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது என கோலி கூறினார்.

மும்பை:

இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்திய தரப்பில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது 3-வது சதத்தை அடித்தார். அட்டகாசமாக ஆடிய அவர் அணியை வெற்றிகரமாக கரைசேர்க்க வித்திட்டார்.

இந்த நிலையில், இந்திய மகளிர் அணிக்கு சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சச்சின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

அற்புதமான வெற்றி. முன்னணியில் இருந்து வழிநடத்தியதற்காக ஜெமிமா மற்றும் ஹாமன்பிரீத் கவுர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மா , நீங்கள் பந்தைக் கொண்டு ஆட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தீர்கள். மூவர்ணக் கொடியை உயரே பறக்க விடுங்கள். என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விராட் கோலி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ஆஸ்திரேலியா போன்ற வலிமையான எதிராளியை எதிர்த்து இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. ஒரு பெரிய ஆட்டத்தில் ஜெமிமாவின் சிறப்பான ஆட்டம், உண்மையான மன உறுதி, நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் வெளிப்பாடு. சபாஷ் இந்தியா. என தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News