null
சாம்பியன்ஸ் டிராபி வென்ற ரோகித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதை நம்ப முடியவில்லை: ஹைடன்
- விராட், ரோகித் 2027 உலகக் கோப்பையை தங்களுடைய மனதில் வைத்திருப்பார்கள்.
- விராட், ரோகித் இந்திய அணியில் இருப்பது தங்கத்தைப் போன்றது.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் 3 ஒருநாள் போட்டி 5 போடிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. ஒரு தொடரில் சுப்மன் கில் தலைமையில் புதிய இந்திய அணி களமிறங்குகிறது.
கடைசியாக ரோகித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய அடுத்தடுத்த 2 கோப்பைகளை வென்று இந்தியா சாதனை படைத்தது.
இதனால் 2027 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்போது அவரால் 40 வயதில் அசத்த முடியுமா என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட்டுள்ளது. அதனால் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி ரோகித் சர்மா ஆகியோர் விளையாடுவது சந்தேகமாக மாறியுள்ளது.
இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பின்பும் ரோகித் சர்மாவை இந்திய அணி கழற்றி விட்டதை நம்ப முடியவில்லை என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட், ரோகித் 2027 உலக கோப்பையை தங்களுடைய மனதில் வைத்திருப்பார்கள். உண்மையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பின்பும் இந்தியா ரோகித் சர்மாவை கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விடுவித்தது ஏனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
அதே சமயம் சுப்மன் கில் கேப்டனாக வளர்க்கப்பட வேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நல்ல தலைவர் உருவாவதற்கு நேரம் எடுக்கும். விராட், ரோகித் இந்திய அணியில் இருப்பது தங்கத்தைப் போன்றது.
ஏனெனில் அவர்கள் வீரர்களாக மட்டுமல்லாமல் அணியில் நல்ல ஆலோசகர்களாகவும் இருப்பார்கள். இது அவர்களுடைய கடைசி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணமாக இருக்காது என்று நான் நம்புகிறேன். ஆனால் துரதிஷ்டவசமாக உங்களால் காலத்திற்கும் விளையாட முடியாது.
என்று கூறினார்.