இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
- ரிஷப் பண்ட் எடுத்த 74 ரன்னில் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.
- விவியன் ரிச்சர்ட்ஸ் 34 சிக்சர்கள் அடித்து 2வது இடத்தில் உள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்கில் இங்கிலாந்து 387 ரன்கள் சேர்த்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது.
ஜெய்ஸ்வால் (13), கருண் நாயர் (40), சுப்மன் கில் (16) அடுத்தடுத்து ஆட்டமிழக்க கே.எல்.ராகுல் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
மூன்றாவது நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 74 ரன்கள் எடுத்திருக்கும்போது ரன் அவுட்டாகி வெளியேறினார். கே.எல். ராகுல்-ரிஷப் பண்ட் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது. ரிஷப் பண்ட் எடுத்த 74 ரன்னில் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.
இந்நிலையில், ரிஷப் பண்ட் அடித்த 2 சிக்சர்களையும் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அவர் அடித்துள்ளார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்ட்சின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்து, புதிய சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக விவியன் ரிச்சர்ட்ஸ் மொத்தம் 34 சிக்சர்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.