கிரிக்கெட் (Cricket)

48 பந்தில் சதம் விளாசிய ரிங்கு சிங்.. ஆசிய கோப்பைக்கான இந்திய லெவனில் வாய்ப்பு கிடைக்குமா?

Published On 2025-08-22 16:37 IST   |   Update On 2025-08-22 16:37:00 IST
  • கடைசி 14 பந்துகளில் 51 ரன்களை ரிங்கு சிங் விளாசினார்.
  • ஆசியக் கோப்பை தொடருக்கு முன் தன் பார்மை நிரூபிக்கும் வகையில் அவர் இந்த ஆட்டத்தை ஆடி இருக்கிறார்.

லக்னோ:

உத்தரப் பிரதேச டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கோரக்பூர் லயன்ஸ் மற்றும் ரில் மீரட் மேவரிக்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கோரக்பூர் லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மீரட் மேவரிக்ஸ் அணி, தொடக்கத்திலேயே தடுமாறியது. 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தபோது, கேப்டன் ரிங்கு சிங் களம் புகுந்தார்.

ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய ரிங்கு சிங், 34 பந்துகளில் 57 ரன்களை எட்டியிருந்தார். அதன் பிறகு பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். குறிப்பாக, கடைசி 14 பந்துகளில் 51 ரன்களை விளாசி மைதானத்தை அதிர வைத்தார். மொத்தமாக 48 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன் காரணமாக மீரட் அணி 18.5 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

வரவிருக்கும் ஆசியக் கோப்பை தொடருக்கு முன் தன் பார்மை நிரூபிக்கும் வகையில் அவர் இந்த ஆட்டத்தை ஆடி இருக்கிறார்.

இதனால் அணி நிர்வாகத்துக்கு ரிங்கு சிங்கை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News