கிரிக்கெட் (Cricket)

ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு: வெளிநாட்டு லீக் தொடரில் தனது பெயரை பதிவு செய்த அஸ்வின்

Published On 2025-09-01 15:27 IST   |   Update On 2025-09-01 15:27:00 IST
  • 2024-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
  • சில தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன் என்று அஸ்வின் கூறியிருந்தார்.

அந்த வகையில் 2025 ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக இடம் பிடித்து விளையாடினார். அந்த தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் சில போட்டிகள் அவர் விளையாடவில்லை. இதனால் அவரை சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். தான் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதற்கு காரணமே உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கையோடு தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

எதிர்வரும் ஐ.எல்.டி டி20 சீசனுக்காக என்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறேன். நிச்சயம் ஏதாவது ஒரு அணி என்னை வாங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஐ.எல்.டி டி20 லீக் போட்டிகளில் இந்திய முன்னாள் வீரர்களான யூசுப் பதான், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு ஆகியோர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News