PSL-லில் இருந்து விலகி IPL தொடரில் இணைந்த தென் ஆப்பிரிக்கா வீரருக்கு ஒரு ஆண்டு தடை விதித்த பாகிஸ்தான்
- ஐபிஎல் ஒப்பந்தம் காரணமாக கார்பின் போஷ் பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகினார்.
- கார்பின் போஷ்கை ரூ.75 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசனானது இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிருப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போதுவரை 24 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தோல்வியைத் தழுவாமல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் தொடர்கிறது.
இந்த ஐபிஎல் தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தென் அப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் லிசாத் வில்லியம்ஸ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
அவர் தொடரில் இருந்து விலகியதன் காரணமாக அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கார்பின் போஷ்க்கை அவரது அடிப்படை ஏலத்தொகையான ரூ.75 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பெஷாவர் ஸால்மி அணிக்காக விளையாட இருந்த நிலையில் ஐபிஎல் ஒப்பந்தம் காரணமாக அவர் பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகினார்.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கார்பின் போஷ்கிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் தனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் கார்பின் போஷ்கின் இந்த முடிவின் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் அவர் பங்கேற்பதற்கு ஒராண்டு தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த பிஎஸ்எல் தொடரில் அவர் தேர்வு செய்யப்படமாட்டார் என்பதையும் பிசிபி தெளிவுபடுத்தியுள்ளது. இதனையடுத்து தன்னுடைய முடிவின் காரணமாக கார்பின் போஷ் மன்னிப்பு கோரினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.