null
ஆசிய கோப்பை: ஓமன் அணிக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
- பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- ஓமன் அணி தரப்பில் ஷா பைசல், ஆமிர் கலீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இதில் இன்று நடைபெறுகின்ற 4-வது லீக் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் - ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரின் 2-வது பந்தில் சைம் அயூப் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனையடுத்து சாஹிப்சாதா ஃபர்ஹான்- முகமது ஹாரிஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார். குறிப்பாக ஹாரிஸ் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். நிதானமாக விளையாடிய சாஹிப்சாதா 29 பந்தில் 29 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதனை தொடர்ந்து ஹாரிஸ் 66 ரன்னில் வெளியேறினார்.
இதனை தொடர்ந்து வந்த கேப்டன் சல்மான் ஆகா டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த நவாஸ் 9 ரன்னில் வெளியேறினார்.
அந்த கட்டத்தில் பாகிஸ்தான் அணி 16.4 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இந்த இக்கட்டான சூழலில் பக்கர் ஜமான் மற்றும் முகமது நவாஸ் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய முகமது நவாஸ் 10 பந்தில் 19 ரன்கள் விளாசி அவுட் ஆனார். இறுதிவரை போராடிய பக்கர் ஜமான் 16 பந்தில் 23 ரன்களுடம் களத்தில் இருந்தார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஓமன் அணி தரப்பில் ஷா பைசல், ஆமிர் கலீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.