கையில் இருந்த மேட்ச்சை கைவிட்ட இலங்கை.. 8 ரன்களில் நியூசிலாந்து வெற்றி
- பதும் நிசங்கா, குசல் மெண்டீஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்தது.
- ஒரு கட்டத்தில் இலங்கை அணி 17 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 144 ரன்கள் குவித்திருந்தது.
மவுண்ட் மவுங்கானுய்:
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் டி20 போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது.
இதில் வென்ற இலங்கை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் ராபின்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களம் இறங்கினர். இதில் ராபின்சன் 11 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து மார்க் சாம்ப்மென் 15, க்ளென் பிலிப்ஸ் 8, மிட்செல் ஹே 0 என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் நியூசிலாந்து 65 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் டேரில் மிட்செல் 62 ரன்னிலும், மைக்கேல் பிரேஸ்வெல் 59 ரன்னிலும் அவுட் ஆனார். இறுதியில் நியூசிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை தரப்பில் பினுரு பெர்னாண்டோ, மகேஷ் தீக்சனா, வனிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா, குசல் மெண்டீஸ் களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்தது. குசல் மெண்டீஸ் 46 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த குசல் பெரேரா 0, கமிந்து மெண்டீஸ் 0, அசலங்கா 3, ராஜபக்சா 8 என வெளியேறினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிசங்கா 90 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒரு கட்டத்தில் இலங்கை அணி 17 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 144 ரன்கள் குவித்திருந்தது. கடைசி 3 ஓவரில் 28 ரன்கள் மட்டுமே தேவை பட்ட நிலையில் அடுத்து 20 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் நியூசிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டும் ஜகாரி ஃபௌல்க்ஸ், மட் ஹென்றி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.