கோப்பையை வழங்காதது சரியான முடிவு: மோசின் நக்விக்கு முன்னாள் வீரர் ஆதர்வு
- இந்தியா அந்த நேரத்தில் கோப்பையை வாங்கிருக்க வேண்டும்.
- மைதானத்தில், நீங்கள் உங்கள் படங்களைத் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தீர்கள்.
துபாயில் சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. ஆனால் இந்திய அணி வீரர்கள் ஆசிய கோப்பையை, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை மந்திரியுமான மொசின் நக்வியின் கையால் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.
இதனால் ஆசிய கோப்பையை, போட்டி அமைப்பு குழு நிர்வாகிகள் தங்களோடு எடுத்து சென்று விட்டனர். கோப்பையை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டாலும், இதுவரை இந்திய அணியிடம் கோப்பை ஒப்படைக்கப்படவில்லை.
தன்னுடைய அனுமதியின்றி ஆசிய கோப்பையை யாருக்கும் வழங்கக்கூடாது என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொசின் நக்வி கட்டளை பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் மொசின் நக்வி செய்வது முற்றிலும் சரியானது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் யூசப் கூறியுள்ளார்.
தலைவர் (மொசின் நக்வி) செய்வது முற்றிலும் சரியானது. அவர் சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இந்தியா அந்த நேரத்தில் கோப்பையை வாங்கிருக்க வேண்டும். ஏ.சி.சி மற்றும் ஐ.சி.சி விதிகளின்படி, அவர் ஏ.சி.சி தலைவராக அங்கே நின்று கொண்டிருந்தார். மேலும் கோப்பை அவரது கைகள் வழியாக மட்டுமே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
நீங்கள் அந்த நேரத்தில் அதை வாங்கவில்லை. இப்போ என்ன அவசரம்? கோப்பையை வாங்க வேண்டும் என நினைச்சிருந்தால், நீங்கள் போய் அலுவலத்தில் அதை வாங்கிருக்க வேண்டும்.
மைதானத்தில், நீங்கள் உங்கள் படங்களைத் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தீர்கள். நான் அன்றும் அதைச் சொன்னேன். அவர்கள் திரைப்பட உலகத்திலிருந்து வெளியே வருவதில்லை. இது விளையாட்டு, இது கிரிக்கெட், இங்கே திரைப்படங்கள் ஓடாது.
என்று அவர் கூறினார்.