கிரிக்கெட் (Cricket)

ஒருவேளை காயம் அடைந்தால்.., பும்ராவின் பணிச்சுமை குறித்து முகமது சிராஜ் கருத்து

Published On 2025-10-07 19:05 IST   |   Update On 2025-10-07 19:05:00 IST
  • காயம் காரணமாக பும்ராவுக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்கப்படுகிறது.
  • இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

பும்ராவின் பணிச்சுமை நிர்வகித்தல் குறித்து கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பும்ராவின் முடிவை ஆதரித்துள்ளார்.

காயம் காரணமாக முக்கியமான போட்டிகளில் மட்டுமே விளையாட பும்ரா முடிவு செய்துள்ளார். ஆசிய கோப்பை தொடரில் விளையாடினார். தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுகிறார். அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவில்லை. டி20 தொடரில் மட்டும் விளையாடுகிறார்.

பும்ராவின் பணிச்சுமை நிர்வகித்தல் தொடர்பாக முகமது சிராஜ் கூறியதாவது:-

வெளியில் இருந்து வரும் விமர்சனங்கள் குறித்து பும்ரா கவலைப்படுவதில்லை. அவருக்கு முதுகுப் பகுதியில் மோசமான காயம் ஏற்பட்டு, மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவர் பந்து வீசி, காயம் ஏற்பட்டிருந்தால் அதன்பிறகு அவரால் பந்து வீச முடியுமா அல்லது முடியாதா? என்பதை சொல்ல முடியாது. இது மோசமானது.

அவர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானவர். ஆசிய கோப்பை தற்போதுதான் முடிவடைந்துள்ளது. அடுத்த வரும் டி20 உலகக் கோப்பை வருகிறது. 2027-ல் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. அவர் இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்திய ரசிகர்கள் புரிந்து கொள்வது அவசியம். அவர் இந்திய அணியின் முதுகெலும்பு. அணிக்கு விளையாட தயாராக இருக்கும்போதெல்லாம், நாட்டிற்கான சிறப்பாக செயல்பட விரும்புவார். அவர் காயம் அடைந்தால், எப்படி செயல்பட முடியும்?.

இது நுட்பமான சூழ்நிலை. அவருக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால், அதில் இருந்து அவரால் குணம் அடைய முடியும். ஆனால், காயத்தில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். ஏனென்றால், ரன்-அப், பவுலிங் ஆக்ஷன் மிகவும் கடினமானது. அதனால், பும்ரா சரியான முடிவை எடுத்துள்ளார் என நினைக்கிறேன்.

இவ்வாறு முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மண்ணில் இந்தியா 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதல் 4 போட்டிகள் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. கடைசி டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.

Tags:    

Similar News