கிரிக்கெட் (Cricket)

திருமணம் நின்றுவிட்டது... இன்ஸ்டாவில் பதிவிட்ட ஸ்மிருதி மந்தனா - என்ன நடந்தது?

Published On 2025-12-07 13:49 IST   |   Update On 2025-12-07 13:49:00 IST
  • கடந்த மாதம் 23-ம் தேதி மந்தனாவுக்கும் - பலாஷ் முச்சலுக்கும் திருமணம் நடக்கவிருந்தது.
  • மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலாஷ் முச்சல் தொடர்பான வீடியோவை நீக்கிவிட்டார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா. இவர் மராட்டிய மாநிலம் சாங்லியை சேர்ந்தவர். சமீபத்தில் இந்திய அணி மகளிர் உலகக் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய மந்தனா மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீராங்கனைகளில் இவரும் ஒருவர்.

இந்த சூழலில் 29 வயதான மந்தனாவும், பிரபல இசையமைப்பாளர் மத்தியபிரதேசத்தை சேர்ந்த பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். சில தினங்களுக்கு முன்பு மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். இதனையடுத்து இருவரின் திருமணம் கடந்த 23-ம் தேதி சாங்லியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடப்பதாக இருந்த நிலையில் மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டடு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மந்தனா மனம் உடைந்து போனார். தந்தை பூரண குணமடைந்து திரும்ப வேண்டும். அதன் பிறகே திருமணம் என்று மந்தனா சொல்லிவிட்டார். அதனால் அவரது திருமணம் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' இணையத்தில் வேகமாக பரவின. முச்சலின் 'துரோகம்'தான் திருமணம் நின்றதற்கு உண்மையான காரணம் என இணையத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது.

இந்த விவகாரம் பேசுபொருளாகிய நிலையில், ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலாஷ் முச்சல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை நீக்கிவிட்டார். திருமண கொண்டாட்ட புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இது பலரது மத்தியில் சந்தேகத்தை கிளப்பியது.




 


இந்த நிலையில் திருமணம் தள்ளிவைக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின் ஸ்மிருதி மந்தனா மீண்டும் சோசியல் மீடியா பக்கம் திரும்பி இருக்கிறார்.

தனது திருமணம் ரத்து செய்யப்பட்டது என்று இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "கடந்த சில வாரங்களாக என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிறைய விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன. என் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புபவள் நான் இல்லை. இதையும் அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன். ஆனால், திருமணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பதை மட்டும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். இந்த விஷயத்தை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புகிறேன்; நீங்களும் அதையே செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News