டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 13,000 ரன்கள்: புதிய சாதனை படைத்த ஜோ ரூட்
- ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்த 5வது பேட்ஸ்மேன் ஆவார்.
- ஜோ ரூட் தனது 153-வது போட்டியில் (279 இன்னிங்ஸ்) 13,000 ரன்களை கடந்துள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 13,000 ரன்களை நிறைவு செய்த 5வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட்பிரிட்ஜில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு டெஸ்டின் முதல் நாளில் 28-வது ரன்னை எடுத்தபோது இந்த மைல்கல்லை எட்டினார்.
ஜோ ரூட் தனது 153-வது போட்டியில் (279 இன்னிங்ஸ்) 13,000 ரன்களை கடந்துள்ளார். 36 சதங்கள் மற்றும் 65 அரை சதங்கள் எடுத்துள்ளார்.
இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை வேகமாக எட்டிய சாதனை படைத்துள்ளார் ஜோ ரூட். இவர் 153 போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் 159 போட்டிகளிலும், இந்தியாவின் ராகுல் டிராவிட் 160 போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 162 போட்டிகளிலும், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 163 போட்டிகளிலும் எடுத்துள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அவர் 200 போட்டிகளில் 15,921 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்குப் பிறகு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 168 போட்டிகளில் 13,378 ரன்னும், ஜாக் காலிஸ் 166 போட்டிகளில் 13,289 ரன்னும், ராகுல் டிராவிட் 164 போட்டிகளில் 13,288 ரன்னும் எடுத்துள்ளனர்.