பால்பிர்னி அசத்தல் சதம்: முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது அயர்லாந்து
- முதலில் ஆடிய அயர்லாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 303 ரன்களைக் குவித்தது.
- தொடக்க ஆட்டக்காரரான ஆண்ட்ரூ பால்பிர்னி சிறப்பாக ஆடி 112 ரன்கள் எடுத்தார்.
டப்ளின்:
வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டி டப்ளினில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 303 ரன்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான ஆண்ட்ரூ பால்பிர்னி சிறப்பாக ஆடி 112 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் பால் ஸ்டிர்லிங் 54 ரன்னும், ஹாரி டெக்டோர் 56 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் மேத்யூ போர்டே 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. அயர்லாந்து அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் முன்னணி வீரர்கள் வெளியேறினர். 31 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து திணறியது.
அடுத்து வந்த ரோஸ்டன் சேஸ் அரை சதம் கடந்து 55 ரன்னில் அவுட்டானார். மேத்யூ போர்டே 38 ரன்னும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 35 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 34.1 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 124 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அபார வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
அயர்லாந்து சார்பில் பேரி மெக் கார்த்தி 4 விக்கெட்டும், ஜார்ஜ் டாக்ரெல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது பால்பிர்னிக்கு வழங்கப்பட்டது.