ஐபிஎல் 2025: சாம் கர்ரன் அபாரம்- பஞ்சாப் கிங்ஸ்க்கு 191 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சிஎஸ்கே
- சாம் கர்ரன் 47 பந்தில் 88 ரன்கள் விளாசினார்.
- எம்.எஸ். தோனி 4 பந்தில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் அடித்தார்.
ஐபிஎல் 2025 தொடரின் 49ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 3ஆவது ஓவரில் சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய இந்த ஓவரின் 3ஆவது பந்தில் ரஷீத் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது சிஎஸ்கே 21 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து சாம் கர்ரன் களம் இறங்கினார். யான்சன் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே மாத்ரே (7) ஆட்டமிழந்தார். பின்னர் 3ஆவது விக்கெட்டுக்கு சாம் கர்ரன் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ஜடேஜா 17 ரன்னில் வெளியேறினார்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் இழந்தபோதிலும் மறுமுனையில் சாம் கர்ரன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு பிரேவிஸ் சப்போர்ட்-ஆக விளையாடினார். சாம் கர்ரன் 30 பந்தில் அரைசதம் அடித்தார். சென்னை அணி 11.1 ஓவரில 100 ரன்னைத் தொட்டது. பிரேவிஸ் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஓமர்சாய் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது சிஎஸ்கே 14.1 ஓவரில் 126 ரன்கள் எடுத்திருந்தது. 5ஆவது விக்கெட்டுக்கு சாம் கர்ரன் உடன் துபே ஜோடி சேர்ந்தார்.
16-ஆவது ஓவரை சூர்யான்ஷ் ஷெட்ஜெ வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் சாம் கர்ரன் சிக்சருக்கு தூக்கினார். சிஎஸ்கே 15.3 ஓவரில் 150 ரன்னை தொட்டது. 4ஆவது மற்றும் 5ஆவது பந்தை பவுண்டரி விரட்டினார். இந்த ஓவரில் சிஎஸ்கே-வுக்கு 26 ரன்கள் கிடைத்தது.
17ஆவது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 18ஆவது ஓவரை யான்சன் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த சாம் கர்ரன் 4ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். சாம் கர்ரன் 47 பந்தில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது சிஎஸ்கே 17.4 ஓவரில் 172 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து துபே உடன் எம்.எஸ். தோனி ஜோடி சேர்ந்தார்.
19ஆவது ஓவரை சாகல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை எம்.எஸ். தோனி சிக்சருக்கு தூக்கினார். ஆனால் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். எம்.எஸ். தோனி 4 பந்தில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஹூடா 3ஆவது பந்தில் 2 ரன் அடித்தார். அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். 5வது பந்தில் கம்போஜ், 6ஆவது பந்தில் நூர் அகமது ஆட்டமிழக்க சாகல் ஹாட்ரிட் விக்கெட்டுன் ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
கடைசி ஓவரை அர்ஷ்தீப் வீசினார். இந்த ஓவரில் துபே ஆட்டமிழக்க சி.எஸ்.கே. 19.2 ஓவரில் 190 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.