ஐபிஎல் 2025: மோசடி லெவனின் கேப்டன் ரிஷப் பண்ட்- வைரலாகும் ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் பதிவு
- நடப்பு ஐபிஎல் போட்டிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் ஏமாற்றம் அளித்துள்ளனர்.
- அப்படிப்பட்ட 11 வீரர்களைத் தேர்வு செய்து ஐபிஎல் மோசடி லெவன் அணியை ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் ஆகிய அணிகள் வெளியேறி உள்ளது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் தடுமாறி வருகிறார்கள்.
அதாவது நடப்பு ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டு அல்லது தங்கள் அணிகளால் அதிக தொகைக்குத் தக்கவைக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தனர். ஆனால், ஐபிஎல் போட்டிகளில் சரியாக ரன் குவிக்காமலும், விக்கெட் எடுக்காமலும் ஏமாற்றம் அளித்துள்ளனர்.
அப்படிப்பட்ட 11 வீரர்களைத் தேர்வு செய்து ஐபிஎல் மோசடி லெவன் அணியை ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. இது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதன்படி இந்த மோசடி லெவன் அணியின் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டு இருக்கிறார். 2025 ஐபிஎல் தொடரில் பண்ட் ரூ. 27 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார். இந்த ஆண்டு அவர் இதுவரை 11 போட்டிகளில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து மிக மோசமாக விளையாடி இருப்பதாகவும், அதனால்தான் அவர் இந்த அணியில் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் ஐஸ்லாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இந்த அணியின் தொடக்க வீரர்களாக சிஎஸ்கே அணியின் ராகுல் திரிபாதி மற்றும் ரச்சின் ரவீந்திரா இடம்பெற்றுள்ளனர். 3-ம் வரிசையில் ஐதராபாத் அணியின் இஷான் கிஷன் இடம்பெற்றுள்ளார். 4-ம் வரிசையில் கேப்டன் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
5-ம் இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் வெங்கடேஷ் ஐயர் தேர்வாகியுள்ளார். இவர் 2025 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 23.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். பல போட்டிகளில் டெஸ்ட் போட்டிகள் போலப் பந்துகளை வீணடித்துச் சோதித்தார் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
6-ம் வரிசையில் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் இடம்பெற்றுள்ளார். மீதமுள்ள பந்துவீச்சாளர்களாக/ஆல்ரவுண்டர்களாக லியாம் லிவிங்ஸ்டன், தீபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஷ்வின், மதீஷா பதிரானா, மற்றும் முகமது சமி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இம்பாக்ட் வீரராக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முகேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.