முத்துசாமி சதம், யான்சன் மிரட்டல்: தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில 489 ரன்கள் குவிப்பு
- முத்துசாமி 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- யான்சன் 93 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ரன் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 49 ரன்களும் பவுமா 41 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முத்துசாமி 25 ரன்களுடனும், வெரெய்ன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. பொறுப்புடன் விளையாடிய முத்துசாமி- வெரெய்ன் ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 300 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடியது.
நிதானமாக விளையாடிய முத்துசாமி அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுறையில் நிதானமாக விளையாடிய வெரெய்ன் 45 ரன்னில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்து முத்துசாமி உடன் யான்சன் ஜோடி சேர்ந்தார்.
இதையடுத்து முத்துசாமி- யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய முத்துசாமி சதம் விளாசினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய யான்சன் அரைசதம் அடித்தார்.
முத்துசாமி 109 ரன்கள் அடித்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹார்மர் 5 ரன்னில் வெளியேறினார்.
யான்சன் தொடர்ந்து அதிரடி காட்டி வந்தார். தென்ஆப்பிரிக்கா 9ஆவது விக்கெட்டை இழக்கும்போது, 462 ரன்கள் எடுத்திருந்தது, கடைசி விக்கெட்டுக்கு யான்சன் உடன் மகாராஜ் ஜோடி சேர்ந்தார்.
யான்சன் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியில் அனுப்பினார். இவரும் சதத்தை நோக்கி முன்னேறினார். 93 ரன் எடுத்திருக்கும்போது குல்தீப் யாதவ் பந்தில் போல்டானார். இதனால் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. மகாராஜ் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும் பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.