2-வது டெஸ்டில் 201 ரன்னில் சுருண்டது இந்தியா: பாலோ-ஆன் வழங்காத தென்ஆப்பிரிக்கா
- வாஷிங்டன் சுந்தர் அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்தார்.
- யான்சென் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. செனுரன் முத்துசாமி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் தனது முதல் டெஸ்ட் செஞ்சூரியை பதிவு செய்தார். முத்துசாமி 109 ரன்னும், மார்கோ யான்சென் 93 ரன்னும் எடுத்தனர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 7 ரன்னுடனும், கே.எல். ராகுல் 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது. 480 ரன்கள் பின்தங்கி, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது. தென்ஆப்பிரிக்க வீரர்களின் அபார பந்து வீச்சால் இந்திய அணி விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 122 ரன் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.
கே.எல். ராகுல் 22 ரன்களும், ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், சாய்சுதர்சன் 15 ரன்னிலும், துருவ் ஜூரல் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் ரிஷப் பண்ட் 7 ரன்னிலும், நிதிஷ்குமார் ரெட்டி 10 ரன்னிலும், ஜடேஜா 6 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மார்கோ யான்சென் 4 விக்கெட்டையும், ஹார்மர் 2 விக்கெட்டையும், கேசவ் மகராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்ததால் பாலோஆன் நோக்கி சென்றது. 8-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர் உடன் குல்தீப் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. இந்த ஜோடி 50 ரன்களை தாண்டி விளையாடியது.
வாஷிங்டன் சுந்தர் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஹார்மர் பந்தில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர்- குல்தீப் யாதவ் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது.
வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்ததும் குல்தீப் யாதவ் 19 ரன்னில் வெளியேறினார். குல்தீப் யாதவ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் யான்சென் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
கடைச விக்கடெ்டுக்கு பும்ரா உடன் சிராஜ் ஜோடி சேர்ந்தார். பும்ரா 5 ரன்னில் யான்சென் பந்தில் ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா பாலோ-ஆன் ஆனது.
ஆனால் தென்ஆப்பிரிக்கா பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. தற்போது 288 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.