வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் இந்தியா 318 ரன்கள் குவிப்பு
- முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 318 ரன்கள் குவித்தது.
- ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும் சுப்மன் கில் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் சிறப்பாக அமைத்தனர். 38 ரன்கள் எடுத்த ராகுல் 19-வது ஓவரில் ஜோமல் வேரிகன் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
பின்னர் வந்த தமிழக வீரர் சாய்சுதர்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி நிதானமாக விளையாடினார். அடுத்தடுத்த ஓவரில் சாய் சுதர்சன் அரை சதமும், மறுபுறம் ஜெய்ஸ்வால் சதமும் விளாசினர்.
தொடர்ந்து விளையாடிய சாய் சுதர்சன் 87 ரன்னில் அவுட் ஆகினார். இதனை தொடர்ந்து கில்- ஜெய்ஸ்வால் ஜோடி பொறுப்புடன் விளையாடினர்.
இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 318 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும் சுப்மன் கில் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.