முதல் இன்னிங்சில் இந்தியா 557 ரன்கள் குவிப்பு: இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 273/2
- இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 557 ரன்கள் எடுத்தது.
- கருண் நாயர் இரட்டை சதமடித்து 204 ரன்னில் அவுட் ஆகினார்.
கான்டேபெரி:
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் அடுத்த மாதத்தில் இருந்து தொடங்குகிறது.
இதற்கிடையே, இங்கிலாந்து தொடருக்கு முன் இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
அதன்படி இந்திய ஏ அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் பயிற்சி போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய இந்திய ஏ அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 8 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து இணைந்த கருண் நாயர்,சர்பராஸ் கான் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் கான் 92 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய கருண் நாயர் சதமடித்து அசத்தினார்.
இந்நிலையில், கருண் நாயர் மற்றும் துருவ் ஜூரல் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். துருவ் ஜூரல் 94 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கருண் நாயர் இரட்டை சதம் விளாசி 204 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 557 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து லயன்ஸ் அணி சார்பில் ஜோஷ் ஹல், ஜமான் அக்தர் தலா 3 விக்கெட்டும், எடி ஜேக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டாம் ஹைன்ஸ் சதமடித்து 103 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மேக்ஸ் ஹோல்டன் அரை சதம் கடந்து 64 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.
3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 106 ரன்கள் சேர்த்துள்ளது. எமிலோ கே 46 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து லயன்ஸ் அணி 2 விக்கெட்டுக்கு 237 ரன்கள் சேர்த்துள்ளது.