4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா: மழையால் மீண்டும் தடைபட்ட IND Vs AUS ஒருநாள் போட்டி
- இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 37 ரன் எடுத்த போது ஆட்டம் மீண்டும் மழையால் தடைபட்டது.
- ஆட்டம் தொடங்கியவுடன் ஸ்ரேயாஸ் 11 ரன்னில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆடிய சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, வீராட் கோலி மிகுந்த ஏமாற்றம் அளித்தனர். ரோகித் சர்மா 1 பவுண்டரியுடன் 8 ரன்னில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார். கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டானார்.
அடுத்து கேப்டன் சுப்மன்கில் 10 ரன்னில் (2 பவுண்டரி), நாதன் எல்லீஸ் பந்தில் அவுட் ஆனார். இந்திய அணி 8.1 ஓவரில் 25 ரன்னில் 3 விக்கெட்டை இழந்து திணறியது.
4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யருடன் அக்ஷர் படேல் ஜோடி சேர்ந்தார். இந்திய அணி 8.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 25 ரன் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப் பட்டது. அதாவது ஒரு ஓவர் குறைக்கப்பட்டது.
இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 37 ரன் எடுத்த போது ஆட்டம் மீண்டும் மழையால் தடைபட்டது. மழை நின்ற நிலையில், தற்போது மீண்டும் ஆட்டம் தொடங்கியுள்ளது. இதனால் ஆட்டம் 35 ஓவர்களாக குறைக்கப் பட்டது.
ஆட்டம் தொடங்கியவுடன் ஸ்ரேயாஸ் 11 ரன்னில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார். இதனையடுத்து மழை குறுக்கிட்டதால் மீண்டும் ஆட்டம் தடைபட்டது. தற்போது இந்திய அணி 14.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.