இங்கிலாந்துக்கு அபராதம்: இந்தியாவுக்கு சாதகமாக ஐசிசி செயல்படுகிறது- மைக்கெல் வாகன் குற்றச்சாட்டு
- இங்கிலாந்து அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.
- இங்கிலாந்து வெற்றி சதவீத புள்ளிகள் ஐந்து அளவு குறைந்திருக்கிறது.
லண்டன்:
இங்கிலாந்து- இந்தியா அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியின் போது பேட்டிங் செய்ய இங்கிலாந்து அணி வீரர்கள் தாமதப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு இருந்தது. குறிப்பாக 3-வது நாள் இறுதியில் இங்கிலாந்து அணி வீரர்கள் ஓவர்களை எதிர்கொள்ள தாமதப்படுத்தியதாக இந்திய அணி வீரர்கள் குற்றம் சாட்டி மோதலில் ஈடுபட்டனர்.
ஆனால் இந்தப் போட்டி ஐந்து நாள் முடிவடைவதற்குள்ளே மூன்றாவது செஷனில் போட்டி முடிவடைந்தது. இதில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் ஓவர்களை தாமதப்படுத்தியதாகக் கூறி இங்கிலாந்து அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 10% அபராதமும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் இங்கிலாந்து வெற்றி சதவீத புள்ளிகள் ஐந்து அளவு குறைந்திருக்கிறது. இதன் மூலம் இரண்டாவது இடத்திலிருந்த இங்கிலாந்து அணி தற்போது மூன்றாவது இடத்திற்கு சரிந்திருக்கிறது.
இதற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் நேர்மையாக ஒரு விஷயத்தைக் கேட்க விரும்புகின்றேன். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளுமேதான் ஓவர்களைக் குறைவாக வீசினார்கள். இந்த விஷயத்தில் இரண்டு அணிகளுமே தவறு செய்தது. ஆனால் ஒரு அணிக்கு மட்டும் தற்போது அபராதம் விதிக்கப்பட்டிருப்பது என்னால் நம்பவே முடியவில்லை.
என்று மைக்கேல் வாகன் கூறினார்.