2வது ஒருநாள் போட்டி: இந்தியாவை எளிதில் வீழ்த்தியது இங்கிலாந்து
- மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
லண்டன்:
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றி அசத்தியது. தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
சவுத்தாம்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என
முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்றது. அங்கு மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா அணி, 29 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி 40 ரன்கள் எடுத்தார். தீப்தி ஷர்மா 30 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் கோடினார்.
இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. டாமி பியூமெண்ட் 34 ரன் எடுத்தார்.
ஏமி ஜோன்ஸ் பொறுப்புடன் ஆடினார். நாட் சீவர் பிரண்ட் 21 ரன்னில் வெளியேறினார்.
மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 24 ஓவரில் 115 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இறுதியில், இங்கிலாந்து அணி 21 ஓவரில் 116 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரில் 1-1 என சமனிலை பெற்றுள்ளது.