கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்து- இந்தியா மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Published On 2025-06-19 21:44 IST   |   Update On 2025-06-19 21:44:00 IST
  • ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள்.
  • 4-வது வரிசையில் கேப்டன் சுப்மன் கில்லும் அதற்கு அடுத்த நிலையில் ரிஷப் பண்ட்டும் விளையாடுவார்கள்.

லீட்ஸ்:

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் லீட்சில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் நாளை ( 20-ந்தேதி ) தொடங்குகிறது.

விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோரின் ஓய்வுக்கு பிறகு இந்தியா விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் என்பதால் அதிக எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சுப்மன் கில்லின் இளம் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலானது.

இந்திய அணி கடைசியாக விளையாடிய 2 டெஸ்ட் தொடரையும் இழந்தது. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட் வாஷ் ஆனது. ஆஸ்திரேலியாவில் 5 போட்டி கொண்ட தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது அவசியமானது.

தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. டெஸ்டில் அறிமுகமாகும் அவர் 3-வது வரிசையில் களம் இறங்கலாம். இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. கருண் நாயரும் இதற்கான போட்டியில் இருக்கிறார். ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுலும் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள்.

விராட்கோலியின் இடமான 4-வது வரிசையில் கேப்டன் சுப்மன் கில் விளையாடுவார். அதற்கு அடுத்த நிலையில் ரிஷப் பண்ட், நிதிஷ்குமார் ரெட்டி, ஜடேஜா உள்ளனர். வேகப்பந்து வீச்சில் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா இடம் பெறுவார்கள். ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் இடையே போட்டி நிலவுகிறது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி கடந்த ஆண்டு இந்திய மண்ணில் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்து இருந்தது.

இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 2 டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தது. நியூசிலாந்து 2-1 என்ற கணக்கிலும், ஜிம்பாபேயை 1-0 என்ற கணக்கிலும் தோற்கடித்து இருந்தது.

அந்த அணியில் ஜோரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெதல் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், சோயிப் பஷீர், பிரைடன் கார்ஸ் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர். கேப்டன் பென்ஸ்டோக்ஸ் ஆல்ரவுண்டர் பணியில் நல்ல நிலையில் இருக்கிறார்.

இந்த டெஸ்ட் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்ப டுகிறது. 

Tags:    

Similar News