தோல்வி..! தோல்வி..! கவுதம் கம்பீருக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது- ஆகாஷ் சோப்ரா சொல்கிறார்
- இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் கேள்விகள் எழும்.
- கேட்டதை எல்லாம் கொடுத்ததாக தேர்வாளர்கள் எண்ணி, ரிசல்ட் என்னவானது என கேள்வி எழுப்புவார்கள்.
இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவரது தலைமையில் இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
கவுதம் கம்பீர் பதவி ஏற்ற பிறகு இந்தியா 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியடைந்தது. அதன்பின் ஆஸ்திரேலியா மண்ணில் 1-3 எனத்தோற்றது.
இந்த நிலையில் ஐந்து போட்டிகளில் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளர் பதவி மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:-
காம்பீர் மீது ஏராளமான அழுத்தம் உள்ளது. இந்த அழுத்தம் அதிகரித்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் அவரது தலைமையில் இந்திய அணி அதிக போட்டியில் வெற்றி பெறவில்லை. வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியிலும் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது. தோல்வி.! தோல்வி..! என சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
ஒயிட்பால் கிரிக்கெட்டில் அவருடைய செயல்பாடு சிறப்பாக உள்ளது. அணி சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது. ஆனால், டெஸ்ட் போட்டியை பொறுத்தவரையில், கேள்வி எழுகிறது. இந்த தொடரில் ஏராளமான அழுத்தம் இருப்பதாக நினைக்கிறேன். இந்த தொடர் இந்தியாவுக்கு சரியாக அமையவில்லை என்றால், கடவுளே வேண்டாம், சிறப்பாக செல்லும் என்று நம்புகிறேன். சிறப்பாக விளையாட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறேன். அப்படி சிறப்பாக இல்லை என்றால், கேள்விக்குறி எழும் எங்கே சென்றீர்கள்? என்ன செய்தீர்கள்? போன்ற கேள்விகள் எழும்.
ஏனென்றால், அணி நிர்வாகம் கேட்டதையெல்லாம் கொடுத்ததாக தேர்வாளர்கள் உணர்கிறார்கள். ஆகவே, ரிசல்ட் காட்ட வேண்டும். சாக்குபோக்கு சொல்ல முடியாது.
இவ்வாறு ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.