கிரிக்கெட் (Cricket)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வி: இந்திய வீரர்களின் சாதனையும் சோதனையும்

Published On 2025-12-04 10:59 IST   |   Update On 2025-12-04 10:59:00 IST
  • ஒரு நாள் போட்டியில் இரு இந்திய வீரர்கள் ஒரே இன்னிங்சில் சதம் அடிப்பது இது 44-வது நிகழ்வாகும்.
  • விராட் கோலி சதம் அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது இது 8-வது முறையாகும்.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் பல சாதனைகளை படைத்துள்ளது. அதேசமயம் சோதனைகளையும் சந்தித்துள்ளது.

அதன்படி கோலி- ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய ஜோடி ஒன்றின் சிறந்த பார்ட்னர்ஷிப் இதுவாகும். இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு குவாலியரில் நடந்த ஆட்டத்தில் சச்சின் தெண்டுல்கர்- தினேஷ் கார்த்திக் இணை 2-வது விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

விராட் கோலி 33 முறை 150 ரன்களுக்கு மேலான பார்ட்னர்ஷிப்புக்கு பங்களித்துள்ளார். அதிக தடவை 150 ரன்னுக்கு மேலான பார்ட்னர்ஷிப்புக்கு உதவியதில் அவர் டெண்டுல்கரை (32 முறை) முந்தியுள்ளார்.

ஒரு நாள் போட்டியில் இரு இந்திய வீரர்கள் ஒரே இன்னிங்சில் சதம் அடிப்பது இது 44-வது நிகழ்வாகும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3-வது முறையாகும்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 135 ரன்கள் விளாசிய விராட் கோலி, 2-வது ஆட்டத்தில் 102 ரன்கள் எடுத்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் கோலி சதம் காண்பது இது 11-வது முறையாகும். இச்சாதனையில் அவரை நெருங்க கூட ஆளில்லை. அவருக்கு அடுத்தபடியாக தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் 6 முறை அடுத்தடுத்த ஆட்டங்களில் சதம் கண்டுள்ளார்.

ராய்ப்பூர் மைதானத்தில் விராட் கோலி அடித்த சதம், அவரது 53-வது சதமாகும். இதையும் சேர்த்து ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் 34 இடங்களில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் அதிக வெவ்வேறு இடங்களில் சதம் அடித்தவரான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை (இவரும் 34 இடத்தில் சதம்) சமன் செய்தார்.

ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி சேர்த்து) விராட் கோலி எடுத்த சதங்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. இந்த சாதனை பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு (100 சதம்) அடுத்த இடத்தில் தொடருகிறார்.

ருதுராஜ் கெய்க்வாட் 77 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய வீரர் ஒருவரின் 2-வது அதிவேக சதமாக இது பதிவானது. 2011-ம் ஆண்டு செஞ்சுரியனில் நடந்த ஆட்டத்தில் யூசுப் பதான் 68 பந்தில் சதம் அடித்ததே சாதனையாக தொடருகிறது.

2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இருந்து ஒரு நாள் போட்டியில் இந்திய அணி டாசில் ஜெயிக்கவில்லை. நேற்றைய போட்டியுடன் தொடர்ச்சியாக 20 ஆட்டங்களில் டாசை இழந்துள்ளது. விராட் கோலி சதம் அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது இது 8-வது முறையாகும்.

இந்திய அணிக்கு எதிராக அதிகபட்ச சேசிங்காக ஆஸ்திரேலியாவின் சாதனையை தென் ஆப்பிரிக்கா சமன் செய்துள்ளது. 

Tags:    

Similar News