ஹேசில்வுட் அபாரம்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி
- வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற 301 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 141 ரன்களுக்கு சுருண்டது.
பார்படாஸ்:
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இதன்படி, இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பார்படாசில் உள்ள பிரிட்ஜ்டவுனில் நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவில் ஹெட் 59 ரன்னும், கவாஜா 47 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டும், ஷமார் ஜோசப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷாய் ஹோப் 48 ரன்னும், ரோஸ்டன் சேஸ் 44 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ், வெப்ஸ்டர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அலெக்ஸ் கேரி 65 ரன்னும், வெப்ஸ்டர் 63 ரன்னும், டிராவிஸ் ஹெட் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமார் ஜோசப் 5 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது.
ஆஸ்திரேலியாவின் துல்லிய பந்துவீச்சில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பினர். முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
கடைசி கட்டத்தில் இறங்கிய ஷமார் ஜோசப் 44 ரன்னும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 38 ரன்னும் எடுத்தனர். 9-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி
56 ரன்கள் சேர்த்தது.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 159 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 5 விக்கெட்டும், நாதன் லயன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.