ஸ்பான்சர் இல்லாத ஜெர்சியுடன் இந்திய வீரர்கள் போட்டோஷூட்- வைரல் புகைப்படங்கள்
- 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது.
- இந்த தொடரில் பங்கேற்க உள்ள 8 அணிகளின் கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) நாளை முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. டி20 வடிவத்தில் இந்த தொடர் நடத்தப்படுவது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2016 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் டி20 வடிவில் நடைபெற்றுள்ளது.
இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இதன் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் பங்கேற்க உள்ள 8 அணிகளின் கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இதில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் விளையாட உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரையொட்டி இந்திய வீரர்கள் புதிய ஜெர்சி அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர். ஆசியக் கோப்பை தொடர் நாளை துபாயில் தொடங்க உள்ள நிலையில், ஸ்பான்சர் இல்லாத ஜெர்சி அணிந்து இந்த தொடரில் இந்திய வீரர்கள் களமிறங்க உள்ளனர்.