3ஆவது டி20யில் பொளந்து கட்டிய டிம் டேவிட், ஸ்டோய்னிஸ்: இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
- டிம் டேவிட் 38 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 74 ரன்கள் விளாசினார்.
- ஸ்டோய்னிஸ் 39 பந்தில் 8 பவுண்டிரி, 2 சிக்சருடன் 64 ரன்கள் சேர்த்தார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ஜித்தேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா ஆகியோர் நீக்கப்பட்டனர்.
அதன்படி ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட்- மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். 4ஆவது பந்திலேயே ஹெட்டை (6) வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். அடுத்து வந்த ஜோஷ் இங்கிலிசை 1 ரன்னனில் வெளியெற்றினார். இதனால் 14 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
மறுமுனையில் வழக்கத்திற்கு மாறாக அர்ஷ்தீப் சிங், பும்ரா பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மிட்செல் மார்ஷ் திணறினார்.
3ஆவது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ் உடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். இவர் வாணவேடிக்கை நிகழ்த்தினார். பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்கவிட்டார். அவர் 23 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இவரது ஆட்டத்தால் 12 ஓவரில் ஆஸ்திரேலியா 100 ரன்னைத் தொட்டது.
தொடர்ந்து விளையாடிய அவர் 38 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 74 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதேவேளையில் மிட்செல் மார்ஷ் 14 பந்தில் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மிட்செல் ஓவன் முதல் பந்திலேயே வருண் சக்கரவர்த்தி பந்தில் வெளியேறினார். அடுத்து 6ஆவது விக்கெட்டுக்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் உடன் மேத்யூ ஷார்ட் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடியும் அபாரமாக விளையாடியது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் 32 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியாவுக்கு எதிராக இவரின் முதல் அரைசதம் இதுவாகும்.
19ஆவது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் ஆஸ்திரேலியா 6 ரன்கள் மட்டுமே அடித்தது. கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தில் ஸ்டோய்னிஸ் ஆட்டமிழந்தார். அவர் 39 பந்தில் 8 பவுண்டிரி, 2 சிக்சருடன் 64 ரன்கள் அடித்தார்.
இந்த ஓவரில் 10 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்துள்ளது. ஷார்ட் 15 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.